சென்னை,
தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கேட்குமாறு தனது கூட்டணி கட்சிகளை தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடியிருக்கிறது. தி.மு.க.வுடன் நான்கு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தி.மு.க. ஐந்து தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. நேற்று முன்தினம் தி.மு.க.வுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் நிலை இருப்பதால் 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செயலாளர் பெ.சண்முகத்திற்கும் இன்று(23.4.2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
