தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச குழு அமைத்தது ஐ.யு.எம்.எல்.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், திமுக 173, காங்கிரஸ் 25, மதிமுக 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, இந்திய கம்யூனிஸ்டு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதி தமிழர் பேரவை 1 என 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் புதிதாக இணைந்துள்ளது.

எனவே, கடந்த முறை போலவே இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு அதே தொகுதிகளை ஒதுக்கவும், மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகளை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. களம் இறங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அதாவது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகள் உள்பட ஆட்சியிலும் பங்கு கோரி வருகிறது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில்தான் திமுக கூட்டணியில் வரும் 22-ந் தேதி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ( ஐ.யு.எம்.எல்), அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் குழு அமைத்துள்ளது. மேலும் இந்த குழுவில் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், எம்.எஸ்.ஏ. ஷாஜகான், எம்.அப்துல் ரகுமான், கே. நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 5 பேர் கொண்ட குழு நேற்று (17-02-2026) சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link