பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது. இந்து – முஸ்லிம் பிரச்சினை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் அரபு நாடுகள் இப்படத்தை வெளியிட தடை விதித்தது.
இந்த நிலையில், துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் இன்று (மார்ச் 19) வெளியானது. நேற்று இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. ஆனால், இந்தியளவில் இந்த படம் தற்போது இந்தி மொழியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற மொழிகளில் வெளியீடு தாமதமாகியுள்ளதால், ரசிகர்கள் இந்தி பதிப்பை பார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற மொழி பதிப்புகளுக்காக முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளுக்கான பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிற மொழி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகின்ற நிலையில், விரைவில் அனைத்து மொழிகளிலும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் பிரீமியர் ஷோவில் மட்டும் உலகளவில் 52.71 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ‘துரந்தர் 2’ படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ ‘துரந்தர் 2’ படம் பார்த்தேன். தேசபக்தியிலும் ஒரு தனி ஸ்டைல். ஒவ்வொரு தேசபக்தனையும் இப்படம் பெருமைப்பட வைக்கும். கைதட்டல்களை அள்ளும் பல தருணங்கள் நிறைந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.மாதவனும் மற்ற அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.
என் சகோதரர் ரன்வீர் சிங் போல, மிகச் சிறந்த பன்முகத்தன்மை கொண்ட ஒரு நடிகர் நம் நாட்டில் இருப்பதை நினைத்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். அவரின் ஆட்டம் அனல் பறக்கிறது. ஆதித்யா தார், இந்தப் படத்தை மிகச் சிறப்பாக, எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வகையில் உருவாக்கியுள்ளார். அவரைப் போன்ற திறமையான இயக்குநர்கள் நம் நாட்டில் இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திரையரங்கையே அதிர வைக்கும் ஒரு படைப்பு. ஒரு இந்திய கதை, ஆனால் சர்வதேச தரத்திலான ஸ்டைல். ஜெய்ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.
