திமுக, அதிமுக கடும் போட்டி
இந்நிலையில் மூன்றாவது முறையாக தொகுதியை தக்க வைக்கும் முயற்சியில் திமுக காய் நகர்த்தி வருகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார், திமுக மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சரண்யா, விளையாட்டு மேம்பாட்டு அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர். மறுபுறம் அதிமுக கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சற்றுமுன் வெளியான வேட்பாளர் பட்டியலில் கழக பொதுக்குழு உறுப்பினர் இ.சரோஜாவிற்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொண்டர்களின் நம்பிக்கையை மீட்ட எடப்பாடி! தேர்தலில் களமிறங்கும் முக்கிய புள்ளிகள்!
தனி தொகுதியில் சமூக செல்வாக்கு
இந்த தொகுதியில் பட்டியல் சமூகத்தினர், முத்தரையர், வெள்ளாளர், இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் பரவலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் பட்டியல் சமூகத்தின் கீழ் வரும் தேவேந்திர குல வேளாளருக்கு வேட்பாளர் பட்டியலில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக தரப்பில் இருந்து இத்தகைய குரல் வலுவாக ஒலிக்க தொடங்கியுள்ளது. துறையூர் தனி தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,09,011 பேர்.
இதில் 1,01,144 பேர் ஆண்கள், 1,07,837 பேர் பெண்கள், 30 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இதில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கின்றன. அப்படி பார்த்தால் இந்த தொகுதியின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே இந்த சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திமுக தலைமைக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதிமுக தரப்பில் சில சலசலப்புகள் ஏற்பட்டன.
அதிமுக வேட்பாளர் இ.சரோஜா
தொகுதியில் நிறைய பணிகளை செய்தவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றை எல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். தற்போது திமுக தேர்வு செய்யும் வேட்பாளர் பட்டியல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார் தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்.
இவருக்கு வாய்ப்புகள் அதிகமிருக்கும் என்று கூறப்படுவதால் அதிமுக தரப்பிற்கு கடினமான போட்டியாக இருக்கும் என்கின்றனர். முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசல்யா சுரேஷ் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அடுத்தகட்டமாக தவெக களமிறக்கும் வேட்பாளரையும் கவனிக்க வேண்டியுள்ளது. எப்படி பார்த்தாலும் 22 ஆயிரம் வாக்குகள் என்ற வித்தியாசம் பெரிதும் குறையும். திராவிட கட்சிகள் போட்டு வைத்த அரசியல் கணக்குகள் கடைசி நேரத்தில் மாறலாம் என்று கூறுகின்றனர்.
