தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர், மாப்பிள்ளையூரணி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி கே.வி.கே. சாமிநகரைச் சேர்ந்த ஹரிகுமார் (வயது 25) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மாமனாரான தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்களான சுப்பிரமணி(58) என்பவர் மற்றும் அவரது உறவினரான சத்தியநாராயணன்(34) ஆகியோர் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் நேற்று மேற்சொன்ன நபர்களில் சத்தியநாராயணன் என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டும், சுப்பிரமணி என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் மேற்சொன்ன தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்ெபக்டர் தங்ககிருஷ்ணன், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சங்கரி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 7 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
