தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கடற்கரைச் சாலை பகுதியை சேர்ந்த லாரன்ஸ் மகன் ஷால்வின் (வயது 23). கடல் தொழில் செய்து வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சானியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடல் தொழிலுக்காக சென்றிருந்த ஷால்வின், ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது மனைவி சானியா ராமேஸ்வரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். சானியாவை உடனடியாக வீட்டிற்கு வருமாறு ஷால்வின் அழைத்துள்ளார். ஆனால், அவர் வர தாமதமாகும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷால்வின், மது போதையில் வீட்டின் உட்புறம் உள்ள மரக்கட்டையில் சுடிதார் சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை இதுகுறித்து தகவல் அறிந்த தருவைகுளம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், இந்தத் தற்கொலை குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
