தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளி கைது.. பல கேள்விகள் எழுகின்றன – அண்ணாமலை

தூத்துக்குடி,

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாக கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியை கைது செய்யவில்லை.

குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, தி.மு.க. அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கி கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு அந்த வழக்கை மெத்தனமாக கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழக காவல்துறை இருந்திருக்கிறது.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாக கூறும் காவல்துறை, சி.சி.டி.வி.யை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link