தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை
கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடிய நிலையில், கடந்த 11 ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தபட்டதற்கான அறிகுறிகளுடன் மாணவி உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சாலை மறியல் போராட்டம்
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்
தனிப்படைகள் அமைப்பு
பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து மாணவியின் உறவினர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
டிஎன்ஏ பரிசோதனை
மேலும் இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் காவல்துறையினர் எடுத்து அதன் முடிவுகளுக்கும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இந்த நிலையில்தான் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர்.
பிடிபட்ட இருசக்கர வாகனம்
அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டுபிடித்ததில் அந்த இருசக்கர வாகனம் ராம்நாடு மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து, மர்ம நபரால் திருடி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது.
தர்ம முனீஸ்வரன் கைது
திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் அந்த காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார் என்பது போன்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது தான் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்பவர் பிடிபட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஞானசேகரன் தண்டனை விவரம்…கோர்ட் எடுத்த முடிவு…!
மாணவி உடலை வாங்க முடிவு
இது குறித்து மாணவியின் தந்தை பேசுகையில், ‘குற்றவாளியை பிடித்து விட்டதாக போலீஸ் கூறுகின்றனர். இனி இதுபோல் நடக்கக் கூடாது. இதுவே கடைசியாக இருக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மரண தண்டனை வழங்க வேண்டும். மேலும் எனது மகளது உடலை நாளை பெற்றுக் கொள்ள முடிவு செய்து உள்ளோம்’ என்று கூறினார்.
