சென்னை,
கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள், அரசு சார்ந்த நிகழ்வுகள், திரைப்படங்கள் உள்ளிட்டவை தொடர்பான விளம்பரங்கள் எழுதுதல் உள்ளிட்ட பணிகளில் தொழில்முறை ஓவியர்கள் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வந்தனர். அரசு கட்டிட சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில் இயற்கை ஓவியங்கள் வரைதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்ட னர்.
குறிப்பாக தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களின் பெயர்களுடன், அரசி யல் கட்சி சின்னங்கள் வரைய தொழில்முறை ஓவியர்களை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அரசியல் கட்சியினர் முன்பணம் கொடுத்து தேர்தல் பணியில் பிரதானப்படுத்தி வந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்களின் கட்-அவுட்களை மிகப்பிரமாண்டமாக தயார் செய்து, மக்களின் கவனத்தை தொழில்முறை ஓவியர்கள் ஈர்த்து வந்தனர்.
ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பின்னர் அரசியல் மற்றும் திரைப்படத்தொழிலில் தொழில்முறை ஓவியர்களுக்கு படிப்படியாக வேலை வாய்ப்பு குறைந்தது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மிகக்குறைந்த விலையில் நேர்த்தியான வடிவங்களில் பேனர்கள், பதாகைகள் கிடைக்க தொடங்கியதால், தொழில்முறை ஓவியர்கள் வேலை வாய்ப்பின்றி பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.
இதற்கிடையே தேர்தல் நேரங்களில் மட்டும் கிராம பகுதிகளில் சுவர் விளம்பரம் எழுதும் வாய்ப்பு தொழில்முறை ஓவியர்களுக்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு காரணமாக தேர்தல் காலத்திலும் முற்றிலும் வேலை வாய்ப்பு இழந்திருப்பதாக கூறி தொழில்முறை ஓவியர்கள் வேதனையில் உள்ளனர். மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள வீட்டு சுவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி சுவர்களில் ஓவியர்களின் கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் வாசகங்களுடன் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. இதில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டிருந்தது.
மேலும் புதுக்கோட்டை தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில், ஓவியர்க ளின் வாழ்வாதாரம் கருதி மீண்டும் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்பான வேண்டுகோள் வாசகமும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து இந்த ஓவியம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பணியாளர்கள் இந்த ஓவியத்தை வர்ணம் பூசி அளித்தனர்.
