2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. பரப்புரை களத்தில் விசிக தலைவர் திருமா தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய்யை தாக்கி பேசி வருகிறார்.
திண்டுக்கல்லில் பேசிய திருமா!
தொடர்ந்து இந்த பரப்புரையில் பேசிய திருமாவளவன் “திமுக கொள்கை ரீதியான கூட்டணி எனவும் மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்திருப்பதாக பேசினார். மேலும் அவர் விஜய் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தருவேன் எனக்கூறியும் யாரும் அவருடன் போய் இணையவில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முற்போக்கு இயக்கங்களும் திமுக கூட்டணியில் தான் இணைந்து இருக்கின்றன. பாஜக மதவாத சக்தியை தூக்கிப் பிடிக்கிறது” என பேசியுள்ளார்.
கடலூரிலும் விஜய் மீது தாக்கு
நேற்றைய தினம் கடலூர் பரப்புரையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விசில் அடிப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள், சட்டசபைக்கு அனுப்ப வேண்டாம் எனவும், தியேட்டரில்தான் விசில் அடிப்பார்கள், சட்டசபையில் விசில் அடிக்க மாட்டார்கள் எனவும் விசிக தலைவர் தவெக மீது திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
களத்தில் விசிகவினர் அதிருப்தி
திமுக மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகவே பரவலாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு பல உதாரணங்களை முன்வைக்க முடியும்.
- தலித்துகள் மீது நடக்கும் வன்முறைகளை திமுக கண்டுகொள்ளாமல் இருப்பதாக பல கட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
- வேங்கை வயல், நாங்குநேரி உள்ளிட்ட பல விவகாரங்களில் ஆளும் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
- இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக -விற்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கியது விசிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட விசிகவுக்கு உரிய மதிப்பை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது.
- காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட இருந்த திருமாவளவன் அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். இந்த பின்வாங்கல் படலமும் திமுகவின் அழுத்தம் காரணமாக தான் நடந்ததாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- திருமாவை மாநில அரசியலுக்குள் நுழைய விடாமல் திமுக தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
திமுக வியூகம் என்ன?
இந்த தேர்தலில் பட்டியலின மக்களின் வாக்குகள் கணிசமான அளவில் திமுக -விற்கு குறையும் என சொல்லப்படுகிறது. மேலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு மாநிலம் முழுக்க நிலவிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை வாக்குகளில் எதிரொலிக்கும் என கருதப்படுகிறது.
திமுகவிடமிருந்து பிரியும் சிறுபான்மையினர் தலித் மக்களின் வாக்குகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு சென்று சேர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. அதன் காரணமாகவே தேர்தல் பிரச்சார களத்தில் விஜயை தாக்கும் பொறுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் திமுக ஒப்படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய்க்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்திருப்பதாக சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் தான் ஒருவேளை விஜய் அதிகளவிலான வாக்குகளை பெற்று தொங்கு சட்டமன்றத்தை உருவாக்கி விடுவாரோ என்ற அச்சத்தில் திமுக தலைமை புதுப்புது வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
