கடந்த சில ஆண்டுகளாக ‘பென்’ என்ற நிறுவனத்தின் மூலம் திமுவுக்கு அரசியல் உத்திகளை வகுக்கும் மறைமுக அதிகார மையமாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சமீப நாட்களாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திமுக வேட்பாளர்களை அழைத்து நேரடியாக தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்து வருவது அரசியல் வட்டாரத்தை உற்று நோக்க வைத்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் கூட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடிஎன மூன்று மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தொகுதிகள் திமுக கூட்டணிக்கு நெருக்கடியாக இருப்பதாக என்று அங்குள்ள நிர்வாகிகள் தெரிவிக்கவே, அதனை கேட்டுக்கொண்டு அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார்.
இந்த மூன்று மாவட்டங்கள் தவிர்த்து, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து களப்பணியில் ஈடுபட இருக்கிறாராம். எந்தெந்த தொகுதிகளில் திமுகவு வலுவில்லாமல் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு, அந்த தொகுதிகளை சரி செய்வதற்கான வேலையை சபரீசனே ஈடுபட இருக்கிறாராம்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நிகழ்விலோ, தேர்தல் பிரச்சார கூட்டங்களிலோ தலைக்காட்டாமல் இருந்த சபரீசன், திடீரென தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருவது திமுகவினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். இதற்கிடையில், தமிழ்நாட்டில் அதிகப்படியான சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதில் மும்பரம் காட்டி வருகிறார்.
சென்னையில் மொத்தம் 16 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்த 16 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர். அதே நேரத்தில், அதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்த 2026 சட்டசபை தேர்தல் திமுகவிற்கு சற்று சவாலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தல் களம் காணவுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சென்னையில் உள்ள தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் (பெரம்பூர்), புஸ்ஸி ஆனந்த் (தி.நகர்), ஆதவ் அர்ஜூனா (வில்லிவாக்கம்), வெங்கடரமணன் (மயிலாப்பூர்), ஜேசிடி பிரபாகர் (ஆயிரம் விளக்கு), அருள் பிரகாசம் (சைதாப்பேட்டை), ராஜ் மோகன் (எழும்பூர்) உள்ளிட்ட மிக முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். இதனால், திமுகவிற்கு வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தேர்தலில் மீண்டும் சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
இதற்காக திமுக களமிறக்கி இருக்கும் நபர் தான் சபரீசன். இவர், தற்போது சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக அரசியல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருவதோடு, அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார்.
திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எதிர்க்கட்சி எதுவும் இல்லை. சட்டமன்ற தேர்தலில் தவெக பங்கேற்பது திமுகவின் வெற்றியை ஒருபோதும் பாதிக்காது. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல், தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதில் இருந்தே ஒரு தலைவரின் தன்னம்பிக்கை காட்டுகிறது என்று சமீபத்தில் சபரீசன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
