தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? தேர்தல் அதிகாரி ஸ்ரீதர் டோரா விளக்கம் – election officer sridhar dora explains what people should do when election code of conduct is in force

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது மக்களும் வியாபாரிகளும் என்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரி ஸ்ரீதர் டோரா விளக்கம் அளித்து உள்ளார்.

தேர்தல் அதிகாரி ஶ்ரீதர் டோரா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி நடைபெறும். பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் தேதி அறிவிப்புடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளதால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.துணை ராணுவப் படையினருடன் இணைந்து முக்கிய சாலைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் மற்றும் பொருள் கடத்தல்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்?

மாவட்ட வாரியாக தேர்தல் அதிகாரிகள் பறக்கும் படையினரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். குறிப்பாக ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் நபர்கள் அதற்கான சரியான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல் அதிக அளவில் பொருட்களை எடுத்துச் செல்லும் வணிகர்கள் மற்றும் தனிநபர்களும் தங்களது பொருட்களுக்கு உரிய பில் அல்லது ரசீதுகளை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேவையான ஆவணங்கள் இல்லாமல் பணம் அல்லது பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால், அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.

உரிய ஆவணங்கள் இருந்தால் பணம் ரிட்டன்

மேலும், பறிமுதல் செய்யப்படும் பணம் அல்லது பொருட்கள் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், சரிபார்ப்பு முடிந்ததும் அந்த பணம் அல்லது பொருட்கள் உரியவர்களிடம் திருப்பி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஸ்ரீதர் டோரா விளக்கம்

இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் செலவின பார்வையாளர் ஸ்ரீதர் டோரா முக்கிய விளக்கங்களை வழங்கினார். தேர்தல் காலத்தில் வணிக நோக்கத்திற்காக அல்லது தனிப்பட்ட தேவைக்காக பணம் எடுத்துச் செல்லும் போது 50,000 ரூபாயை மட்டுமே எடுத்து செல்லலாம்.
அதற்கு மேல் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழலில், அதற்கான ஆதார ஆவணங்களை களத்தில் பணிபுரியும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பொள்ளாச்சி பகுதியில் வாரம் ஒருமுறை நடைபெறும் மாட்டுச் சந்தையில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆவணங்கள் அவசியம்

இதனால் கிராமப்புறங்களில் இருந்து வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பணம் பரிமாற்றம் செய்வது வழக்கம். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அதிகாரி, கால்நடை விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் உரிய ரசீதுகள் மற்றும் ஆவணங்களை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

விஜய் பவர் இது தான்! சரியான கேள்விகளை எழுப்பினார்!

இதுபோன்ற வணிக பரிவர்த்தனைகள் நடைபெறும் இடங்களில் முன்னதாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், யாருக்கும் சிரமம் இல்லாத வகையில் விதிமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தேர்தல் நேரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைத் தடுக்கவும், சுத்தமான தேர்தலை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.