தொகுதியில் முந்திய காங்கிரஸ்.. சின்னத்தில் முந்தப்போகும் பாஜக…!

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில், மத்தியில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. அதேபோல், இங்கே எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. இடம்பெற்றுள்ளது. கடந்த (2021) சட்டசபை தேர்தலிலும் இதே நிலைதான் இருந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் கூடுதல்

2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 18-ல் வெற்றி பெற்றது. பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா இறந்ததை தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பிறகு, அவரும் மரணம் அடைந்த நிலையில், மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாமல், தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுத்தது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். தற்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது, கடந்த தேர்தலைவிட 3 அதிகமாகும்.

பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகள் அதிகம்

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 4-ல் வெற்றி பெற்றது. இந்த முறை 27 தொகுதிகளை பெற்றுள்ளது.

எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், கடந்த முறையைவிட பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகள் கூடுதல் என்றாலும், எதிர் வரிசையில் உள்ள தேசிய கட்சியான காங்கிரசுடன் ஒப்பிடும்போது 1 குறைவுதான்.

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் கிடைக்குமா?

அதனால், சின்னங்கள் அடிப்படையில் எண்ணிக்கையை உயர்த்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதாவது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பா.ம.க. மாம்பழம் சின்னத்தில் போட்டியிட நினைக்கிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு முடிவை பொறுத்தே மாம்பழம் சின்னம் டாக்டர் அன்புமணிக்கு கிடைக்குமா? என்பது தெரியவரும். இதேபோல், அ.ம.மு.க. குக்கர் சின்னத்திலேயே போட்டியிடும் என்று தெரிகிறது.

மேலும், இந்த கூட்டணியில் த.மா.கா.வுக்கு 3, புதிய நீதிக்கட்சிக்கு 2, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு 1, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 என்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில், புரட்சி பாரதம் கட்சி மட்டும் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையில் போட்டியிடும் என்று தெரிகிறது.

த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளை பா.ஜ.க.வின் சின்னமான தாமரையில் போட்டியிட வைக்க மத்திய மந்திரியும், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வலியுறுத்தி வருகிறார்.

தாமரை சின்னத்தில் 35 பேர் போட்டி

அவ்வாறு நடந்தால், மேலும் 8 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்படும். ஏற்கனவே, பா.ஜ.க. 27 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் நிலையில், இந்த 8-ஐயும் கணக்கில் சேர்க்கும்போது, 35 பேர் பா.ஜ.க.வின் சின்னமான தாமரையில் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. அதை வைத்து பார்க்கும், தொகுதியில் காங்கிரஸ் முந்தினாலும், சின்னம் அடிப்படையில் பா.ஜ.க. முந்தப்போவது உறுதியாக தெரிகிறது.

Source link