தமிழக நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்பாகவும், இக்கட்டான சூழலில் கைக்கொடுக்கும் உற்ற நண்பனாகவும் என்றும் திகழ்வது தங்க நகைகள் மட்டுமே. அவசர தேவைக்காக யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லாமல், வீட்டில் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து உடனடியாக நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது புதிய தொழில் தொடங்குவது என எந்தவொரு நிதி நெருக்கடிக்கும் நகைக்கடன் ஒரு எளிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
நகைக்கடன்களைப் பொறுத்தவரை, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும். தனியார் நிதி நிறுவனங்களில் வட்டி சற்று கூடுதலாக இருந்தாலும், அவர்கள் வழங்கும் கடன் தொகை (LTV) வங்கிகளை விடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தங்கத்தின் சந்தை விலை அடிக்கடி மாறினாலும், நீங்கள் கடனைப் பெறும்போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம், கடனைத் திருப்பிச் செலுத்தி நகையை மீட்கும் வரை மாறாமல் அப்படியே இருக்கும் என்பது ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட்.
RBI எச்சரிக்கை: வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருக்கும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, கடனை சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால், அந்த நகைகளை ஏலத்தில் விட வங்கிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அவசரத் தேவைகளுக்காக நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருப்பவர்களுக்கு இது ஒரு “அபாய மணி” எனக் கருதப்படுகிறது. வாங்கிய கடனுக்கான வட்டி அல்லது முதன்மைத் தொகையை தாமதப்படுத்தினால், வங்கிகள் அந்த நகைகளை ஏலத்தில் விற்று பணத்தை மீட்டெடுக்கலாம்.
இதுவரை, நகை ஏலத்திற்கு முன் வாடிக்கையாளர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பி, போதிய கால அவகாசம் வழங்குவது நடைமுறையாக இருந்தது. ஆனால், Reserve Bank of India புதிய விதிமுறைகளின்படி, இனி நீண்ட அவகாசம் கிடைப்பது கடினமாகியுள்ளது. குறைந்தபட்ச நோட்டீஸ் காலம் முடிந்தவுடன், வங்கிகள் நேரடியாக ஏல நடவடிக்கையை தொடங்கலாம்.
புதிய நடைமுறையின்படி, கடன் காலக்கெடு முடிந்த உடனேயே குறுகிய அவகாசத்திற்குப் பிறகு ஏலம் நடைபெறலாம். இதனால், நகையை மீட்டெடுக்க சிறிதளவு தாமதம் கூட நிரந்தர இழப்பாக மாறக்கூடும். “தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வட்டி கட்டாத நகைகளை ஏலத்தில் விற்று வங்கிகள் இழப்பை ஈடு செய்ய முயற்சிக்கின்றன” என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
கடன் வாங்கியவர்கள் கவனிக்க வேண்டியது:
* வட்டி மற்றும் தவணைகளை காலக்கெடுவில் கட்டுதல் அவசியம்.
* இறுதி நோட்டீஸ் கிடைக்காத நிலையிலும், வங்கி சட்டப்படி ஏலத்தை நடத்தலாம்.
* ஏலத்தில் அதிக தொகை கிடைத்தால், மீதியை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
