கடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(வயது 44). கார் டிரைவர். இவரும், வடலூரில் தங்கியிருந்து அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த தனலட்சுமி (34) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
வேலை சம்பந்தமாக அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வந்த பிரேம் ஆனந்த், கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிநாட்டுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அதன் பிறகு அவர் தனது மனைவி தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 25.1.2016 அன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற தனலட்சுமி இரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந் துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், தனலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கொலையை மறைப்பதற்காக அவரை தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார்.
இருப்பினும் வடலூர் போலீசார் நடத்திய விசாரணையில் பிரேம் ஆனந்த், தனலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி நீதிபதி குலசேகரன் தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்ட னையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வளர்மதி ஜெயச்சந்திரன் ஆஜராகி வாதாடினார்.
