புதுடெல்லி
நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். அப்போது, இந்தியாவின் வட பகுதிகள் அதிக மழைப்பொழிவை பெறும். தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை கிடைக்கும்.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், நடப்பு ஆண்டில் நாட்டில் தென்மேற்கு பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இயல்பை விட குறைவாக இருக்க கூடும் என்று கணித்துள்ளது. இது நீண்ட கால சராசரியில் 92 சதவீதம் (5 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்க கூடும்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1971 முதல் 2020 ஆண்டு காலகட்டத்திற்கான பருவ மழையின் நீண்ட கால சராசரி 87 செ.மீ. என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், நடப்பு 2026-ம் ஆண்டில் மழை பொழிவுக்கான சாத்தியம், இயல்புக்கு குறைவாக (நீண்ட கால சராசரியில் 90-95 சதவீதம்) அல்லது பற்றாக்குறை (90 சதவீதத்திற்கும் குறைவாக) என்ற பிரிவுகளில் இருக்க கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.
எனினும், மே மாதம் இறுதி வாரத்தில் பருவமழைக்கான புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்பு வெளியிடப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
