சென்னை,
இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் தற்போது ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களின் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். இதில் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த படத்துகுக ரவி வர்மா. கே ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இயற்கையும், அமைதியும் சூழ்ந்த கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது.
இந்த படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் செல்வராகவன் நடிகை கவுசல்யாவை பற்றி பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, “இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அசுரத்தனமாக உழைத்தனர். அவர்கள் எப்போது தூங்குவார்கள், சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு கடும் உழைப்பாளிகள், இவர்களைப் பார்த்து நான் இப்படியும் படம் எடுக்கலாம் என கற்றுக் கொண்டேன்.
படத்தில் நடித்திருக்கக்கூடிய நடிகை கவுசல்யாவை பார்த்து ஒரு காலத்தில் நானே ரசித்து “ஜொள்ளு” ஊத்தி இருக்கிறேன். இப்பொழுது அருகிலேயே இந்த நிகழ்ச்சியில் அமர்வது கூட சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று செல்வராகவன் கலகலப்பாக பேசினார்.
