கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ரோடு ஷோ மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த எழுச்சிமிகு பயணத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தால் அரசியலில் புதிதாக எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தில் பா.ஜ.க.வை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார். இது பா.ஜ.க.வின் வளர்ச்சியைக் கண்டு அவர் கொண்டுள்ள பயத்தையே காட்டுகிறது.
மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து பேசிய அவர், “தமிழக அரசு முறையான விரிவான திட்ட அறிக்கையைக் கொடுக்காததே மெட்ரோ ரெயில் திட்டம் தாமதமாகக் காரணம். சாத்தான்குளம் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்படியானது; அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் கோபகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் உமாரதிராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
