நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஷெல் நிறுவனம்

புதுடெல்லி,

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஈரானின் முக்கிய எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்கியதால், கத்தாரின் மிகப் பெரிய எண்ணெய் வயலை ஈரான் தாக்கியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. மேலும், பெட்ரோல்-டீசல் மீதான சுங்க வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தனியார் எண்ணெய் நிறுவனமான ‘ஷெல்’, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.41 உயர்ந்து, ரூ.119.85-க்கு விற்கப்படுவதாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25.01 உயர்ந்து, ரூ.123.52-க்கு விற்கப்படுவதாகவும் ஷெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதே போல், தனியார் நிறுவனமான ‘நயாரா’ ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link