இந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களும் நேற்றைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை செயலக நிர்வாகி குறிப்பிட்டு இருந்ததுபோல், எப்படி 234 தொகுதி வேட்பாளர்களும் திருச்சி மாநாட்டில் ஒரே மேடையில் அறிவிக்கப்பட்டார்களோ அதை போலவே அனைத்து வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது அளிக்கப்படும் பிரமாண பத்திரத்தில் வேட்பாளர்கள் தங்களின் சொத்து மதிப்புகளையும் அளிப்பார்கள். அந்தவகையில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோரின் சொத்து விவரங்கள் வெளியானது. அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட இருக்கின்ற பாத்திமா பர்கானா நேற்றைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பாத்திமா பர்கானாவின் சொத்து நிலவரம்
- வேட்பு மனு தாக்கல் செய்தபோது வெளியிட்ட பிரமாண பத்திரத்தில்,கையிருப்பில் ரொக்க பணமாக ரூ.20 ஆயிரமாக உள்ளது என பாத்திமா குறிப்பிட்டிருந்தார்.
- வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் வைப்பு நிதி மற்றும் சேமிப்பு நிதியாக ரூ.6,04,513 இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- 10 லட்சம் மதிப்பிலான 80 கிராம் தங்க நகைகளை வைத்துள்ளார் பாத்திமா பர்ஹானா.
- மேலும் பாத்திமாவின் பேரில் சொந்த வேளாண் நிலம், வீடு என எந்த அசையா சொத்துக்களும் இல்லை.
- பூர்வீக சொத்துக்கள் ஏதுமில்லை எனவும் அவர் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை கோபாலபுரம் ஆக்சிஸ் வங்கியிலிருந்து ரூ.1லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
- மேலும் பாத்திமா பர்கானா மீது எவ்வித குற்றவியல் வழக்கும் நிலுவையில் இல்லை என அவர் தனது பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சீமான் சொத்து மதிப்பு
இந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொத்து விவரங்களும் வெளியாகி இருக்கிறது. நேற்றைய தினம் காரைக்குடியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த சீமான் தனது சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தையும் சமர்ப்பித்த இருந்தார். வருகிற தேர்தலில் நாம் தமிழர் கட்சி (நாதக) 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட சமத்துவ அடிப்படையில் 117 ஆண்கள் மற்றும் 117 பெண் வேட்பாளர்களை அக்கட்சி களமிறக்கியுள்ளது.
சீமான் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் தனக்கு சொந்தமாக வீடு நிலம் என எந்த ஒரு அசையா சொத்தும் இல்லை என அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தன்னிடம் 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். அவரது மனைவியை கயல்விழி வசம் ரூ.3.44 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் சீமான் குடும்பத்தினர் வசம் ரூபாய் 19 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு தேச துரோக வழக்கு உட்பட 24 வழக்குகள் சீமான் மீது நிலுவையில் இருக்கின்றன.
வருகிற 2026 -ஆம் ஆண்டு தேர்தல் நான்கு முனை தேர்தல் தான் என்ற சூழல் உருவாகியுள்ளதால் யார் வெற்றி பெறுவார் என்பதை தற்போது வரை கணிக்க முடியவில்லை.
