நான்கு தொகுதியிலும் உதய சூரியன்தான் … முடிவை மாற்றிய மதிமுக! – mdmk to contest all 4 seats on rising sun symbol says vaiko

வருகிற சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் ஒதுக்கிவிட்டது. இந்த நிலையில் 4 தொகுதிகளை பெற்றிருக்கும் மதிமுக 3 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சீர்காழி தொகுதியிலும் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.

ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட 21 கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. திமுகவின் கூட்டணி விவாகாரம் ஓரளவுக்கு முடிந்து தற்போது தான் தேர்தல் பரப்புரை உள்ளிட்ட வேலைகளில் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில் திமுகவில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் தேமுதிகவிற்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (மதிமுக) நான்கு தொகுதிகளையும், ஒதுக்கியது திமுக.

ஏற்கனவே கூட்டணியில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தேமுதிகவிற்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியது பேசுபொருளானது.

விட்டுக்கொடுத்த மதிமுக

ஆனால் வருகிற தேர்தலில் வெற்றி பெற வேண்டியது எவ்வளவு அவசியம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விளக்கியதாலும் கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் ஏற்கனவே இருக்கக்கூடிய கட்சிகள் நட்பு ரீதியாக தங்களின் தொகுதிகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதாலும் பெருந்தன்மையோடு மதிமுக தலைவர் வைகோ நான்கு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டார் என சொல்லப்பட்டது. அந்த நான்கு தொகுதிகளிலும் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலே மதிமுக போட்டியிடும் என அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த 2021 தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வென்றது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதன் பிறகு 2026 -ம் திமுக கூட்டணியில் தொடர்ந்தது. ஆனால் 2026 இல் இரண்டு தொகுதிகள் குறைக்கப்பட்டு நான்கு தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டது.

இந்த சூழலில் இறுதியாக திமுக கூட்டணி கொடுத்த நான்கு தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவித்துள்ள்ளார் வைகோ. மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி தொகுதியில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் .ஆனால் இவர்கள் நான்கு பேரும் உதயசூரியின் சின்னத்தில் தான் போட்டியிட இருக்கின்றனர். சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடும் என சொல்லப்பட்ட மதிமுக தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் சில கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற பேச்சுக்கள் இருந்த வண்ணமே இருக்கின்றன. ஏற்கனவே மதிமுக மூன்று தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சித்திருந்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு திமுக தலைமைதான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அழுத்தம் தந்ததா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றன. இந்த சின்னம் விவகாரம் வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் விமர்சகர்கள்.

Source link