நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 33), பிரதோஷ் (31) ஆகியோர் குடும்பத்துடன் தங்கி தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்களில் மனோஜ்குமாருக்கு லோகன்குமார் (4) என்ற மகனும், பிரதோ சுக்கு ஹரிசங்கர் (3) என்ற மகனும் இருந்தனர். நேற்று மாலை சிறுவர்கள் லோகன்குமாரும், ஹரிசங்கரும் தங்கள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் இருவரும் காணாமல் போனார்கள்.
இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர் தங்கள் மகன்களை காணவில்லை என்று அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது நூற்பாலையில் உள்ள தரைமட்ட கழிவுநீர் தொட்டியில் சிறுவர்கள் தவறி விழுந்து இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக வெப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த 2 சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிபாளையம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
