நாம் தமிழர் வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள்…!

திருச்சி,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பிரசாரம் பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

இதில், 117 தொகுதிகளுக்கு ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார்.

வழக்கறிஞரான வித்யாராணி வீரப்பன் ஆரம்ப காலத்தில் பாமகவில் அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். பின்னர், 2020ல் பாஜகவில் இணைந்தார்.அவருக்கு பாஜக மாநில ஓபிசி அணியின் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் பாஜகவில் இருந்து விலகிய வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். அவர் நாம் தமிழர் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளாரக நியமிக்கப்பட்டார்.

2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக வித்யாராணி வீரப்பன் களமிறங்கினார். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். தற்போது வரும் சட்டசபை தேர்தலில் வித்யாராணி வீரப்பன் நாம் தமிழர் வேட்பாளராக மேட்டூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

அதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திரைப்பட டைரக்டரும், பொறியாளருமான சோழன் மு.களஞ்சியம் நாம் தமிழர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Attachment
PDF
2026_NTK_Candidates_All_Pages_3_30__1_

Preview

Source link