சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை கைவினை பொருட்கள் கண்காட்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், அந்தத் துறைக்கு அமைச்சரான, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்கவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அதன்பிறகு அங்கிருந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றுவிட்டார். அங்கு, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றபோது, தாமதமாக வந்த அமைச்சர் ஆர்.காந்தி, தயங்கியபடி சென்று அவருக்கு புத்தகத்தை பரிசளித்தார்.
அதை வாங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆர்.காந்தியிடம் கையை நீட்டி கோபமாக பேசினார். அப்போது, விளக்கம் அளிக்க ஆர்.காந்தி முயற்சித்தபோதும், கையை காட்டி சைகை மூலம் பேசுவதை நிறுத்தக் கூறினார். அருகில் நின்ற அமைச்சர் கே.என்.நேருவும் ஆர்.காந்தியை திட்டினார். இதனால், செய்வதறியாது திகைத்த அமைச்சர் ஆர்.காந்தி, ஓரமாகச் சென்று சோகமாக நின்று கொண்டார். அதன்பின்னர் நடத்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு வராத அமைச்சரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிந்துகொண்டது தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
