நிதிநிலை அறிக்கை என்ற பெயரில் ஏமாற்று வேலை அறிக்கை: டிடிவி தினகரன் விமர்சனம்

சென்னை,

இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”சட்டமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை எனும் பெயரில் திமுக அரசு தாக்கல் செய்த “ஏமாற்று மாடல் அறிக்கை”

நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தமிழகத்திற்கு அறிவிக்க வேண்டிய திட்டங்களை அடுக்கிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யப்போகும் இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆஹா ஓஹோ என்று இருக்கும் எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு வழக்கம் போல ஏமாற்றத்தையே பரிசாக வழங்கியுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சியில் தொடங்கி, இலங்கைத் தமிழர், குழந்தைகள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் திருநங்கைகள் நலன் என தலைப்பிட்ட பக்கங்கள் அனைத்திலும் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் புகழும் பெருமையும் மட்டுமே நிறைந்திருப்பதை பார்க்கும் போது இது நிதிநிலை அறிக்கையா அல்லது தமிழக அரசு அன்றாடம் வெளியிடும் செய்திக் குறிப்பா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பயங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம். சட்டவிரோத மது விற்பனை, கட்டப்பஞ்சாயத்து மற்றும் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் என திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் குற்றச்சம்பவங்களின் தலைநகரமாக மாறிவரும் தமிழகத்தை இந்தியாவின் அமைதியான மாநிலம் என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பக்கம் பக்கமாக வாணித்திருப்பது வெட்கக்கேடனது.

அடிப்படை வசதியில்லாத அரசுப்பள்ளிகள், அவலநிலையில் காட்சியளிக்கும் மருத்துவமனைகள், மக்களுக்கு பயனளிக்காத அலுவலகங்கள் என ஒரு அரசு நிர்வாகம் எப்படியெல்லாம் இயங்கக்கூடாது என்பதற்கு தலைசிறந்த உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு, தனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பான இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்காமல் அடியோடு புறக்கணித்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.

உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள், உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி ஊராட்சிச் செயலாளர்கள் ஊதிய உயர்வு கோரி கௌரவ விரிவுரையாளர்கள் தலைநகர் சென்னையின் நாலாபுறமும் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாழ்வாதார போராட்டங்களில் ஒலிக்கும் ஞசல் சட்டமன்றத்திற்குள் மட்டும் கேட்காமல் போனது ஏன்? என தெரியவில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் செயல்படுத்தாமல், கடனை மட்டுமே வாங்கி குவித்து இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்த திமுக அரசு, தற்போது தாக்கல் செய்திருக்கும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் மேலும் ரூ.1,79,809 கோடி கடன் வாங்க திட்டமிட்டிருப்பதன் மூலம் திமுக அரசுக்கும், நிர்வாகத் திறமைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link