அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதனுடன் நட்புக் கொண்டுள்ள கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ராணுவம் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் 2 வாரத்துக்கும் மேலாக பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஈரான் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் போர் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், நீங்கள் யார் பக்கம் தான் இருக்கிறீர்கள்? என்று இஸ்லாமிய நாடுகளுக்கு கேள்வி எழுப்பி ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தொடர் வஞ்சகமான தாக்குதல்கள் குறித்து இஸ்லாமிய நாடுகள் மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது.
உதவி கோரும் சக முஸ்லிமுக்குத் தோள் கொடுக்காதவன் முஸ்லிமே அல்ல’ என்பது நபியின் வாக்கு. ஆனால், எதிரிகளால் இந்த இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்ட ஈரானிய மக்களுடன் எந்த நாடும் துணை நிற்கவில்லை.
ஈரானைத் தாக்க அனுமதித்துவிட்டு, பதிலுக்கு அமெரிக்க தளங்களை தாக்கினால் எங்களை எதிரி என்பதா? ஈரான் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா? நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். பிராந்தியத்தின் எதிர்காலத்தை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

