நீலகிரி: கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை.. பொதுமக்கள் அச்சம்

நீலகிரி,

தமிழகத்திலேயே 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது. இங்குள்ள வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வனவி லங்குகள் நடமாட்டமும், அட்டகாசமும் அதிகரித்து காணப்படுகிறது. அதி லும் சில வனவிலங்குகள் ஊரை ஒட்டிய பகுதிக்குள் புகுந்து முகாமிட்டபடி அங்கேயே நிரந்தரமாக தங்கி சுற்றித்திரிகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டம், அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், குறைந்தபாடில்லை.

அதன்படி கடந்த சில நாட்களாக ஊட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் கிராமத்தில் புகுந்து சர்வ சாதாரணமாக உலா வந்து நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன.

இந்தநிலையில் கடநாடு மற்றும் மாவுக்கல் கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்து சுற்றித்திரிந்தது. கடநாடு கிராமத்தில் புகுந்த போது சிறுத்தை அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு வைத்து அங்கும், இங்குமாக மெதுவாக நடந்து சென்று உலாவியும், பின்னர் அமர்ந்து வீட்டின் மேலே அண்ணாந்து பார்த்தும் இரை தேடியது. மேலும் வீட்டு அருகே சென்று அங்குள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி செல்ல முடியாமல் வாசல் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து இரைக்காக காத்திருந்தது. பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

Source link