நேபாள தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து நேபாள பிரதமர் பதவியை கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து நேபாளத்தின் இடைக்கால பிரதமராக கடந்த செப்டம்பர் மாதம் சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட ராஷ்டிரிய சுதந்திர கட்சி, நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராப் பாடகர் பாலேந்திர ஷா களமிறங்கினார்.

நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி, 165 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், 124 இடங்களில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றிபெற்றுள்ளது. ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில், நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“ராஷ்டிரிய சுதந்திரக் கட்சியின்(RSP) நிறுவனர் ரபி லாமிச்சானே மற்றும் மூத்த தலைவர் பாலேந்திர ஷா ஆகியோருடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டேன்.

தேர்தல் வெற்றிகளுக்காகவும், நேபாளத் தேர்தல்களில் ராஷ்டிரிய சுதந்திரக் கட்சியின் மகத்தான வெற்றிக்காகவும் இரு தலைவர்களையும் வாழ்த்தினேன். நமது இரு நாடுகளின் பரஸ்பர செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்காக நேபாளத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.

நமது கூட்டு முயற்சிகளால், வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் நேபாள உறவுகள் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link