நேபாள மக்களவை சபாநாயகராக டி.பி. ஆரியால் போட்டியின்றி தேர்வு

காத்மண்டு

நேபாள நாட்டின் ராஷ்டீரிய சுதந்திரா கட்சியின் துணை தலைவரான டோல் பிரசாத் ஆரியால் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைவர் ரபி லமிசானே ஆதரவு தெரிவித்ததுடன், மந்திரிகள் ஸ்வர்னிம் வாகலே, சோபிதா கவுதம் மற்றும் சுனில் லம்சால் ஆகியோரும் ஆதரவளித்திருந்தனர்.

நடப்பு ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், காத்மண்டு-9 தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கீழவையின் 10-வது சபாநாயகராகி உள்ளார். 18 ஆண்டுகளில் கம்யூனிஸ்டு அல்லாத முதல் நபராகவும் அவர் உள்ளார்.

1974-ம் ஆண்டு மைதி நகரில் பிறந்த அவர், 1992-ம் ஆண்டு வேலை தேடி காத்மண்டு நகருக்கு வந்து, உணவு விடுதி ஒன்றில் தொழிலாளியாக சேர்ந்து, பின்னர் சுற்றுலா வழிகாட்டியாகவும் பணியாற்றினார்.

வேலைக்காகவும், படிப்புக்காகவும் ஜப்பான் சென்ற அவர், நேபாளத்திலும், வெளிநாட்டிலும் பல அனுபவங்களை பெற்றார். கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்ட ஆரியால், ராஷ்டீரிய சுதந்திரா கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது தீவிர அரசியலில் இறங்கினார். மூன்றரை ஆண்டுகளில், அக்கட்சியின் அடிப்படை மத்திய உறுப்பினரானார். இந்நிலையில், கீழவையின் சபாநாயகராகவும் ஆகியுள்ளார்.

இது அந்நாட்டின் 4-வது உயரிய பதவியாக கருதப்படுகிறது. கட்சியின் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை பெற்று துணை தலைவர் பதவியை வகித்து வரும் அவர் நாடாளுமன்ற சபாநாயகர் என்ற பாகுபாடற்ற மற்றும் கவுரவத்திற்குரிய பதவியையும் பெற்றுள்ளார். அவர் இதற்கு முன்பு, தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறைக்கான மந்திரியாக 2 முறை பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமாவை தொடர்ந்து, கடந்த 5-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், ராஷ்டீரிய சுதந்திரா கட்சியை சேர்ந்த ராப் பாடகர் பாலேந்திர ஷா வெற்றி பெற்று பிரதமரானார்.

Source link