பட்ஜெட் கூட்டத்தொடர் 2-வது அமர்வு: நாடாளுமன்றம் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ம் தேதியுடன் முதல் கட்ட அமர்வு நிறைவு பெற்றது.

மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியை தொடங்கிய எதிர்க்கட்சிகள், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சர்ச்சை, இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் என பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தன.

கடந்த 3- தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத்தலைவர் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிர்க்கட்சி எம்.பிக்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சபாநாயகர் ஓம்.பிர்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாக குற்றம்ச்சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ம் தேதி வரை இந்த அமர்வு நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மக்களவையில் முதல் நாளிலேயே சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் அன்றே சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிரான விவாதம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்குமாறு எம்.பி.க்களுக்கு பாஜக, காங்கிரஸ் கொரடா உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும். மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link