சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை நெல்லையை விட்டு சாத்தூரில் போட்டியிட உள்ளதாக ஆரம்பம் முதலே செய்திகள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும் என்றும் தான் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.
முன்னதாக பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் பட்டியலில் நெல்லைக்கு பதிலாக சாத்தூர் தொகுதி இடம்பிடித்திருந்தது. பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் தனது தொகுதியை நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2001 சட்டசபை தேர்தல் முதல் தொடர்ச்சியாக நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன். 1962-க்கு பிறகு நெல்லை தொகுதியில் ஒரு முறை ஜெயித்த யாரும் அடுத்த தேர்தலில் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. இது நயினாருக்கும் அப்படியே பொருந்தும் என்பதாலே இம்முறை தொகுதி மாறி அவர் சாத்தூரில் செண்டிமெண்டாக களமிறங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இதனிடையே நெல்லையில் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட போதெல்லாம் மழுப்பலாகவே பதில் சொல்லி வந்த நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை குறிவைத்தும் அங்கு இடம்பெயர்வதாக கூறப்படுகிறது. தொகுதி மாறப் போவதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் கடந்த 6 மாத காலமாகவே சாத்தூர் தொகுதியில் இதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
