நடிகை திவி சமீபத்தில் ‘பப்’ ஒன்றில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்த பேட்டியில், தன்னைச் சுற்றியுள்ள ஆடை விமர்சனங்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் நடிகை திவி கூறியதாவது, “சமீபத்தில் ஒரு ‘பப்’பில் நான் இருந்தபோது, என் மெய்காப்பாளர் அருகிலிருந்த நிலையிலும் ஒருவர் என் இடுப்பில் கை வைத்தார். உடனே அந்த நபரை தாக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். அப்போது நான் எனக்கு வசதியான ஒரு டி-ஷர்ட் மட்டுமே அணிந்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆடை தொடர்பான விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “ஒருவர் அணியும் ஆடையில் ஆபாசம் இருப்பதாக நினைத்தால், அதை அணிய வேண்டிய அவசியமில்லை. அதேபோல், ஒரு ஆடை உங்களுக்கு சங்கடமாக இருந்தால் ஏன் அதை அணிய வேண்டும்? இன்னொருவர் அணியும் ஆடை பார்க்கவே சங்கடமாக இருந்தால், ஏன் அதை பார்க்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
சமீப காலமாக நடிகைகள் அணியும் ஆடைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், பல பிரபலங்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். “எங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை” என அவர்கள் விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
