சென்னை,
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வருகிற 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் நெருங்குவதால் ஆளும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை ஏறக்குறைய முடித்துவிட்டது. ஒரு சில கட்சிகளுடன்தான் பாக்கியுள்ளது. இந்த நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த சூழலில் தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்தார். பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், பா.ஜனதாவுக்கு 27 தொகுதி கள், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள், அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமியும், அந்தந்த கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்குகிறார். சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உள்பட்ட மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் நாளை மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டநிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, மீண்டும் அவர் பிரசாரம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
