பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக சந்தையில் விற்கப்படும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் அவற்றின் தரம், விலை அல்லது ஏற்றுமதி விவரங்களை குறிக்க ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. ஆனால், இந்த ஸ்டிக்கர்களை ஒட்ட பயன்படுத்தப்படும் பசைகளில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருக்கக்கூடும் என்றும், அவை பாக்டீரியாக்களை ஈர்த்து சேமித்து வைக்கும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகை இரசாயன எச்சங்கள் உடலுக்குள் தொடர்ந்து சென்றால், குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினைகள், அலர்ஜி உள்ளிட்ட உடல்நலக்கேடுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனைத் தவிர்க்க, பழங்களை சாப்பிடும் முன் ஸ்டிக்கர்களை முழுமையாக அகற்றி, ஓடும் நீரில் நன்றாக கழுவி, தேவையானால் தோலை உரித்து சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெறும் துணியால் துடைப்பது மட்டுமே போதாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டிக்கர்கள் தகவலுக்காக உதவினாலும், அவை உடல்நலத்திற்கு ஆபத்தான எச்சங்களை கொண்டிருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என FSSAI வலியுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த சட்டப்பூர்வ அமைப்பு, பழங்கள் மீது மீதமிருக்கும் பசை எச்சங்கள், உட்கொள்வதற்கு உகந்ததல்ல என்றும், அவை உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக FSSAI தனது இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பதிவில், “பழ ஸ்டிக்கரைக் கடிக்கும் முன் இருமுறை யோசியுங்கள்! பழம் மற்றும் காய்கறி ஸ்டிக்கர்கள் சாதாரணமாகக் காணப்பட்டாலும், அவற்றை ஒட்டி வைக்கப் பயன்படுத்தப்படும் பசைகள், உட்கொள்வதற்கு உகந்ததல்லாத எச்சங்களை விட்டுச்செல்லக்கூடும்” என எச்சரித்துள்ளது.
இந்த பசை எச்சங்கள் இரசாயனத் தன்மையுடையவை என்பதால், அவை உடலுக்குள் சென்றால் வயிற்றுப் பிரச்சினைகள், அலர்ஜி போன்ற உடல்நலக் கேடுகளை உருவாக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பொதுமக்கள் பழங்களை சாப்பிடும் முன் ஸ்டிக்கர்களை முழுமையாக அகற்றி, நன்றாகக் கழுவி, தேவையானால் தோலை உரித்து சாப்பிட வேண்டும் என FSSAI வலியுறுத்தியுள்ளது.
பழங்களில் ஏன் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன?
பழ ஸ்டிக்கர்கள் PLU (Price Look-Up) லேபிள்கள் என அழைக்கப்படுகின்றன. பழத்தின் பெயர் மற்றும் வகையை எளிதில் கண்டறிய உதவுகிறது. இயற்கை (Organic) முறையிலா அல்லது வழக்கமான முறையிலா விளைவிக்கப்பட்டது என்பதை காட்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் விரைவான பில்லிங் செய்ய உதவும்.
சாத்தியமான உடல்நல அபாயங்கள்: ஸ்டிக்கர் எச்சத்தை உட்கொள்வது எப்போதும் உடனடித் தீங்கை ஏற்படுத்தாது, ஆனால் மீண்டும் மீண்டும் அதன் பாதிப்பு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பழங்களை உண்ணும்போது தங்களுக்குத் தெரியாமல் ஸ்டிக்கர்களை உட்கொள்ளக்கூடிய குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரசாயன உட்கொள்ளல்: ஸ்டிக்கர்களை ஒட்ட பயன்படுத்தப்படும் பசைகளில், உட்கொள்வதற்கு ஏற்றதல்லாத இரசாயனச் சேர்மங்கள் இருக்கக்கூடும்.
மாசுபடும் அபாயம்: ஸ்டிக்கர் பகுதி, அழுக்கு, பாக்டீரியா மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்களை சிக்கவைத்து வைத்திருக்கலாம்.
செரிமான எரிச்சல்: செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு லேசான வயிற்று வலி அல்லது அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நிபுணர்கள் கூறுவதாவது, “Food-grade” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த ஸ்டிக்கரை நேரடியாக சாப்பிடலாம் என்ற அர்த்தமில்லை. இத்தகைய உணவு அல்லாத பொருட்கள் தொடர்ந்து உட்கொள்ளப்படுவது, உடலை தேவையற்ற இரசாயனங்களுக்கு உள்ளாக்கும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
- சாப்பிடுவதற்கு முன் ஸ்டிக்கர்களை எப்போதும் அகற்றவும்.
- காய்கறி மற்றும் பழங்களை ஓடும் நீரில் குறைந்தது 5 நிமிடங்கள் கழுவவும்.
- முடிந்தவரை தோலை உரித்து சாப்பிடவும்.
- ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இடத்தில் நேரடியாகக் கடிக்க வேண்டாம்.
- ஆப்பிள், வெள்ளரிக்காய் போன்றவற்றை சுத்தம் செய்ய தனி தூரிகை பயன்படுத்தலாம்.
- சோப்பு அல்லது கிருமிநாசினி பயன்படுத்த வேண்டாம்.
- குளிர்பதனம் தேவைப்படும் பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள்.
- உணவுகளை கார்களில் அல்லது வெளியே நீண்ட நேரம் வைக்க வேண்டாம்.
- கழுவும் தொட்டி மற்றும் மேடைகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
