தெஹ்ரான்,
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்கே அனுப்புவோம் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். இதையடுத்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், ஈரான் கராஜ் நகரை தெஹ்ரானுடன் இணைக்கும் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா நேற்று இரவு தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டு டிரம்ப் கூறியதாவது: “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுகிறது. இனி அது ஒருபோதும் பயன்பாட்டுக்கு வராது. இதுபோன்ற பல நிகழ்வுகள் தொடரவுள்ளன. எதிர்காலத்தில் மாபெரும் நாடாக உருவெடுக்கக்கூடிய ஈரானில் எஞ்சியிருக்கும் அனைத்தும் அழிந்துபோவதற்கு முன்பாக, தாமதப்படுத்தாமல் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்கான நேரம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த தாக்குதலால் கோபம் அடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை தாக்கி அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியிட்ட பட்டியலில் குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலமும் இதில் அடங்கும். மேலும், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே, ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம் மற்றும் அப்தூன் பாலம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
பழிக்குப்பழி நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.
