சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் பல திட்டங்களை, தமிழ்நாட்டை பொறுத்தவரை, நாம் இன்று செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதிகமான வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை திராவிட மாடல் உயர்த்தியுள்ளது.
பாஜகவின் டப்பா எஞ்சினுக்கு இங்கு வேலையே இல்லை. இதே உணர்வைத்தான் மக்கள் முகங்களில் காணும் மகிழ்ச்சியாக நான் பார்க்கிறேன்.
அண்மையில் வெளியான சி-வோட்டர் கருத்துக் கணிப்பில், நம்முடைய கூட்டணி 45 சதவீத ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நான் உறுதியாக சொல்கிறேன் நமக்கான ஆதரவு நிச்சயமாக இதைவிட இன்னும் கூடுதலாகவே இருக்கும்.
கருத்துக் கணிப்புகள், கருத்துத் திணிப்பு ஆகியவற்றில் நமது எண்ணத்தைச் செலுத்தி மெத்தனமாக இருந்து விடக்கூடாது. மக்களோடு இணைந்து நம்முடைய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தோழமை கட்சிகள் அனைத்தும் இன்னும் வேகமாக பரப்புரையை தொடங்க வேண்டும் என்று உரிமையோடு நான் கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் நாம் பொறுப்பேற்று பெறப்போகும் வெற்றி, பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கக்கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். ஒற்றுமை இருக்கும் இடத்தில் பாஜகவின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவோம்.
அதிமுக என்பது தனிக்கட்சி கிடையாது. பாஜகவின் கிளை அமைப்புதான் அதிமுக. மதுராந்தக பொதுக்கூட்டத்தில் அதிமுக என்ற பெயரையே சொல்லவில்லை பிரதமர் மோடி. பாஜகவின் கிளை அமைப்பைச் சேர்ந்த எடப்பாடி, மோடி கொடுக்காத வாக்குறுதிகளைகூட கொடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
