பாஜகவின் தூண்டுதலின் பேரில் தலைமை செயலாளர் மாற்றம்.. இது ஆணவத்தின் உச்சக்கட்டம்.. தேர்தல் ஆணையத்தை விளாசிய ஸ்டாலின்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழக தலைமை செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றி சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் களத்தில் இறங்கிப் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் தேர்தல் அரங்கில் மட்டும் முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தேர்தல் ஆணையத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தற்போது, ​​தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் (IAS) அவர்களைப் பணியிட மாற்றம் செய்ததன் மூலம், தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமான மற்றும் வரம்பு மீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை நடத்துவதையே முதன்மைப் பணியாகக் கொண்ட தேர்தல் ஆணையம், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின் ஆணைகளை அவமானகரமான முறையில் நிறைவேற்றி வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பு அரண், பாஜகவின் தேர்தல் சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்டதல்ல. நாட்டை ஒரு சர்வாதிகாரப் பாதையில் இட்டுச்செல்ல முயலும் பாஜக அரசின் கீழ், ஆதிக்க மனப்பான்மையுடன் செயல்பட்டுக்கொண்டு, இந்த அடிப்படை உண்மையை உணராமல் போனதன் மூலம், தேர்தல் ஆணையம் தனது கண்ணியத்தைத் தெருவில் இழுத்துப்போட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் இருக்கும் அசாம் மாநிலத்தில் தற்போது தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு, அம்மாநில டிஜிபி-யையோ அல்லது தலைமைச் செயலாளரையோ அவர்கள் பணியிட மாற்றம் செய்யவில்லை. பாஜகவின் பினாமி ஆட்சி நடைபெற்ற பீகார் மாநிலத்திலும் தேர்தல்கள் நடைபெற்றன. அங்கும் கூட, டிஜிபி-யையோ அல்லது தலைமைச் செயலாளரையோ அவர்கள் பணியிட மாற்றம் செய்யவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே தலைமைச் செயலாளரும், டிஜிபி-யும் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் பட்டுள்ளனர். பாஜகவின் தூண்டுதலின் பேரிலேயே தேர்தல் ஆணையம் அவர்களைப் பணியிட மாற்றம் செய்துள்ளது.

அதிமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு, தமிழ்நாட்டில் பாஜக அரங்கேற்றத் திட்டமிட்டுள்ள தேர்தல் முறைகேடுகளுக்குத் தேர்தல் ஆணையமே தீவிரமாகத் துணைபோவது, அதற்குச் சற்றும் அழகல்ல. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இன்று அப்பதவிகளில் இருக்கலாம்; நாளை அவர்கள் அப்பதவிகளிலிருந்து விலகிச் செல்லலாம். ஆனால், நாட்டின் மக்கள் அனைவரின் நம்பிக்கையையும் ஈட்டும் வகையில் நமது அரசியலமைப்பு முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மையை இவ்வாறு தெருவில் இழுத்துப்போடுவது, நமது நாட்டிற்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கும் ஒரு பெரும் ஆபத்தாக அமையும்.

தமிழ்நாடு உட்பட, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ‘தலைமைச் செயலாளர்கள்’ மற்றும் ‘டிஜிபி-க்கள்’ ஆகியோரைப் பணியிட மாற்றம் செய்யத் தூண்டும் பாஜகவின் இந்த ‘தர்பார்’ பாணியிலான செயல்பாடு, ஒரு கசப்பான உண்மையை உணர்த்துகிறது. அதாவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மீறிப் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து, “தலைமைத் தேர்தல் ஆணையரை நானே நியமிப்பேன்” என்று அறிவித்த பிரதமரோ அல்லது அவர் வழிநடத்தும் மத்திய பாஜக அரசோ, தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மையை ஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை என்பதே அந்த உண்மையாகும்.

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக திகழும் தேர்தல் ஆணையம், தற்போது ‘காவிமயமாக்கப்பட்டுவிட்டது’ என்பதையே இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அவர்கள் எத்தனை அதிகாரிகளை இடமாற்றம் செய்தாலும் சரி, தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வுவது உறுதி. புனிதமான தாலிக்கயிற்றை மறைத்து வைத்து ஒரு திருமணத்தை நிறுத்துவது எத்தகையதோ, அதேபோலவே, அதிமுக மற்றும் பாஜகவை உள்ளடக்கிய ‘NDA’ கூட்டணியின் நலனுக்காக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எதேச்சாதிகார வரம்பு மீறலும் ஆணவமும், அகந்தையின் உச்சக்கட்டமாகத் திகழ்கின்றன!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Source link