சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குகின்றன. இதேபோல், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் களத்தில், புது வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் மல்லுக்கு நிற்கிறது.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு தமிழக பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. பாஜக சக்தி கேந்திராவின் தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவியை பாஜக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 14-ம் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சேலத்துக்கு வருகை தர உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவில் சக்தி கேந்திரா என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. சக்தி கேந்திரா என்பது தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். குறிப்பாக வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் பணியை மையப்படுத்தி செயல்படும். தமிழகம் முழுவதும் இருக்கும் வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைக்கும் பணியை இந்த சக்தி கேந்திரா செய்யும்.
தமிழக பாஜகவில் மாநில, மாவட்ட மண்டல நிர்வாகிகளுக்கு கீழ் ஓட்டுச்சாவடிகளில் கிளை அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர். இதில், 3 வாக்கு சாவடிகளுக்கு ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி 3 வாக்குச்சாவடிகளுக்கான பொறுப்பாளராக இருப்பவர் தான் சக்தி கேந்திரா பொறுப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்.
இவர்களின் பணி தங்களுக்கு கீழ் உள்ள வாக்குச்சாவடிகளின் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து மக்களை அதிகளவில் தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும். இதனால், தான் பாஜகவில் சக்தி கேந்திரா பொறுப்பாளர் பதவி முக்கியமான ஒன்றாக உள்ளது.
தமிழக பாஜகவில் மொத்தம் 25 ஆயிரம் பேர் வரை சக்திகேந்திரா பொறுப்பாளர் பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மாநில சக்தி கேந்திரா தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு கிடைக்கும் பட்சத்தில் அவர் சக்தி கேந்திரா பிரிவில் பணியாற்றும் 25 ஆயிரம் பேரை கண்காணித்து ஆலோசனைகளை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
