சட்டப்பேரவை தேர்தலுக்காக கடந்த முறை பாஜகவுக்கு வழங்கப்பட்ட இடங்களை விடவும் கூடுதலாக இந்த தடவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது. இதன் காரணமாக அண்ணாமலை முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக கடந்த முறை வெற்றி பெற்றிருந்த நாகர்கோவில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் மீண்டும் வழங்கப்படவில்லை. போன தடை கோவை தெற்கு பாஜகவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கோவை வாக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை எதிர்பார்த்த இரண்டு தொகுதிகள்
இதனிடையில் கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட திட்டமிட்டு இருந்தார். அதிமுகவிடம் இருந்து கோவையில் மூன்று தொகுதிகளை பாஜக கேட்ட நிலையில், இரண்டு இடங்களாவது கிடைக்குமென எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒரேயொரு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது.
பாஜகவுக்கு சாதகமில்லாத இடங்கள்
இதன் காரணமாக கோவையில் போட்டியிடலாம் என ஆர்வமாக இருந்த அண்ணாமலை ஏமாற்றம் அடைந்துள்ளார். அதே போல் அதிமுக ஒதுக்கியுள்ள பெரும்பாலான தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லையெனவும் அவர் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனை தலைமையிடம் அவர் வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை
மேலும், தனக்கு சீட் வேண்டாம் எனவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவையும் கட்சி தலைமையிடம் அண்ணாமலை தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம் வழக்கம் போல கட்சி தொண்டராக சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சி பணியாற்றுவேன் எனவும் அவர் கூறியுள்ளாராம். மேலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கும் தொகுதிகள் அதிமுக கூட்டணியில் வழங்கப்படவில்லை என்பது அண்ணாமலையின் அதிருப்திக்கு முக்கிய காரணமென அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றன.
வானதி சீனிவாசன்
இதனிடையில் பாஜக வானதி சீனிவாசன் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லி தலைமைக்கு போட்டியிட போவதில்லை என்று அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாரா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என தெரிவித்திருந்தார்.
வேட்பாளர் தேர்வு
மேலும் அவர் பேசுகையில் கூட்டணி என்று வரும் போது நாம் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில் சில ஏமாற்றங்கள் இருக்கலாம். இது அனைத்தும் கலந்து ஒன்று தான் கூட்டணி. எனவே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் தொகுதிகளில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வருகிறோம். அதற்காக வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை நடத்தி கொண்டிருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையில் கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குவதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
