சென்னை,
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சமையல் கியாஸ் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதிய பொதுமக்கள் தாங்கள் ‘புக்’ செய்த சிலிண்டர்கள் தங்கள் வீடு தேடி வரும் வரை காத்திருக்காமல் நேரடியாக கியாஸ் ஏஜென்சிகளுக்கு சென்று வாங்கிச் செல்லும் நிலையும் நிலவி வருகிறது.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் 3-வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். நேற்று சென்னையில் தியாகராயநகர், அண்ணாநகர், மாம்பலம், ராயப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பினர்.
பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பி கொண்டனர். இதுதவிர குடிநீர் கேன், பாட்டில்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர். தினசரி வேலை, அலுவலக பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்றும், தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்கிறோம் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. பாட்டில்கள், கேன்களில் கொண்டு செல்லப்படும் பெட்ரோலால் பெரும் விபத்து ஏற்படலாம் என்றும், பெட்ரோல் நிலையங்கள் இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்றும், பெட்ரோல் நிலையங்கள் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல்களை நிரப்ப வேண்டும் என்பதே சட்ட விதி என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
