தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 11-ம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும் குற்றவாளி கைது செய்யப்படாதது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த துத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் வழக்கு விசாரணை குறித்து கூறிய விரிவான தகவல்கள் பின்வருமாறு:
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 டி.எஸ்.பி.க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 காவலர்கள் கொண்ட 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சம்பவ இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாத போதிலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள 98 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் 2,514 தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்குரிய 461 நபர்களிடம் டிஜிட்டல் மற்றும் நேரடி முறையிலான தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கிராம மக்களிடம் பெறப்பட்ட தகவல்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரைத் தனிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ சமூக வலைதளங்களில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இதுவரை அவ்வாறு பயன்படுத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் யாராவது சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டால், அவர்கள் மீது பிரிவு 23-ன் கீழ் (POCSO Act) எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு கிராமத்திலும் தலா 10 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண் காவலர்கள் மூலம் கிராமங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
