சென்னை,
சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துகொண்டு தொடர்ந்து பா.ஜனதாவுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் கண்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.
இதற்கிடையே, பா.ஜனதாவில் இணைந்து 2 ஆண்டுகள் ஆகியும் சரத்குமாருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எந்தவொரு பதவியும் பா.ஜனதாவில் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், சட்டசபை தேர்தலும் நெருங்கி விட்டதால் சரத்குமார் தனது ஆதரவாளர்கள் சிலருக்கு போட்டியிட பா.ஜனதா தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.
ஆனால் அதற்கு பா.ஜனதா தலைமையிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பா.ஜனதா சரத்குமாரை புறக்கணிப்பதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டனர். பா.ஜனதாவில் இருந்து விலகுங்கள் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சரத்குமார் தனது ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்கவும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விவாதிக்கவும் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
சென்னை தியாகராயநகர் கீதம்ஹாலில் காலை 10 மணிக்கு நடக்கும் நிகழ்வில், அகில இந்திய சரத்குமார் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள், சுப்ரீம்ஸ்டார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சரத்குமார் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அரசியலில் தனது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க இருக்கிறார்.
