பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மயிலாப்பூரில் வேட்புமனு தாக்கல்

சென்னை,

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. 27 இடங்களில் போட்டியிடுகிறது. இதில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று, மத்திய மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில் டாக்டர் தமிழிசை சுவந்தரராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலட்சுமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்த பின்னர், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“என்னுடைய அனைத்து பணிகளும் மக்களுடன் இணைந்துதான் இருக்கின்றன. மக்கள் மனதில் அமர்வதே முக்கியம் என நினைக்கிறேன். மயிலாப்பூர் மக்கள் ஒரு முன்னுதாரனமான சட்டமன்ற உறுப்பினரை பார்ப்பார்கள். என்னை கண்டிப்பாக வெற்றிபெற செய்வார்கள். மயிலாப்பூர் தொகுதியில் வாகன நெரிசல், தண்ணீர் பிரச்சினை, மீனவர்களுக்கு பிரச்சினை, வீடுகட்டி கொடுப்பதில் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மயிலாப்பூர் மட்டுமல்லாது தமிழகத்திலும் தி.மு.க. அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

பல தேர்தல்களில் நான் போட்டியிட்டுள்ளேன். தமிழகத்தில் ஒரு சவாலான சூழ்நிலையில்தான் எங்கள் கட்சி இருந்து வந்தது. இப்போது எங்கள் கட்சியை பலப்படுத்தியுள்ளோம். அதனால், நாங்களும் பலம் பெற்றுள்ளோம். பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்வதை விட மயிலாப்பூரில் ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக, சகோதரியாக வலம்வரவே நான் ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link