கனிமொழி பரப்புரை
இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டுள்ளார் கனிமொழி. அவர் பேசுகையில் திமுக ஆட்சி இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சின்னு சொல்லுவாங்க. பிடிஆர் நெற்றியையும், கையையும் பார்த்தாலே தெரியும். கடவுள் மீது நம்பிக்கையுள்ள ஒருவருக்காக தான் உங்களுக்கு ஓட்டு கேட்கிறேன். கோயில் நிலங்களை மீட்டெடுத்து இருக்கக்கூடிய ஆட்சி திமுக.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
உண்மையிலே இந்துக்களுக்கு பாதுகாவலரான ஆட்சி திராவிட மாடல். எல்லாரையும் சமமாக நடத்தும், பாதுகாக்கும் அரசு. மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது என்றார். தொடர்ந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கும் சுந்தர் சியையும் விமர்சனம் செய்துள்ளார் கனிமொழி.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் எதிர்கட்சியினர் இந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத வேட்பாளரை நிறுத்தி உள்ளார்கள். நாடு முழுவதும் தெரிந்த ஒரு வேட்பாளராக பிடிஆர் இருக்கிறார். அவருக்கு டெல்லியில் கூட ரசிகர்கள் உள்ளார்கள் என்று சுந்தர் சியை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார் கனிமொழி.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சுந்தர் சி
மதுரை மத்தி தொகுதியை அதிமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதி கட்சிக்கு வழங்கியுள்ளது. இதனையடுத்து சுந்தர் சி வேட்பாளராக களமிறங்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி குஷ்பு கடந்த தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளாராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில், இந்த தடவை சுந்தர் சி போட்டியிடுகிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் அவர் இந்த தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.
இனி வாழ்க்கையில் 15 நாட்கள் மதுரையில்
அவரை தற்போது தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர் என கனிமொழி விமர்சித்துள்ளார். முன்னதாக அவரிடம் சென்னையில் இருக்கும் நீங்கள் மதுரை மத்தி தொகுதியில் போட்டி போடுகிறீர்கள். உங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என கேட்கப்பட்டது. அதற்கு இனிமேல் என் வாழ்க்கையில் மாதம் 15 நாட்கள் இனி மதுரை மக்களோட தான் இருப்பேன் என தெரிவித்திருந்தார். அதோடு உதயசூரியன், இரட்டை இலை சின்னத்துக்கு இடையில் தான் மதுரை மத்தி தொகுதியில் போட்டி எனவும் பேசியிருந்தார் சுந்தர் சி.
தீவிர வாக்கு சேகரிப்பு
மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு உள்ளூர் மக்களின் பேராதரவு இருக்கும் நிலையில், அவரை எதிர்த்து சுந்தர் சி களமிறங்குகிறார். அவருக்கு சினிமா பிரபலம் மற்றும் இரட்டை இலை சின்னம் இரண்டும் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மற்றொரு பக்கம் பிடிஆரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
