டெல் அவிவ்
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் தகவல்கள் பரவின.
இதில், சமூக ஊடகத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் நெதன்யாகு போன்ற முகம் கொண்ட நபர் ஒருவர் காயத்துடன், இடிபாடுகளுக்கு இடையே காணப்படுகிறார். அவருக்கு வீரர்கள் உதவிடும் காட்சி பதிவாகி உள்ளது.
அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமுற்றார் என்றும், இதுவே அவருடைய கடைசி புகைப்படம் என்றும் பலர் கூறினர். எனினும், இது ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம் அல்லது டிஜிட்டல் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஒன்றாக இருக்க கூடும் என்றும், தாக்குதலில் நெதன்யாகு காயமடைந்ததற்கான ஆய்வு செய்யப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்பட்டது.
சமூக ஊடக பயனாளர்கள் சிலர், போரின்போது அவர் கொல்லப்பட்டு விட்டார் அல்லது காணாமல் போய் விட்டார் என தகவல்களை பரப்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்திடம், நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டு விட்டார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தியில், இது பொய்யான தகவல். பிரதமர் நெதன்யாகு நன்றாக உள்ளார் என பதிலளித்து உள்ளது.
சில ஊடக பயனாளர்கள் அது பொய்யான, ஏ.ஐ. உருவாக்கிய வீடியோ என குற்றச்சாட்டு கூறினர். ஏனெனில், பிரதமரின் வலது கையில் 6 விரல்கள் இருப்பது போன்று வீடியோவில் காட்சிகள் இருந்தன. அவர் கையை உயர்த்தும்போது, 6-வது விரல் இருப்பது போன்று தெரிந்த காட்சியால், அது ஏ.ஐ. உருவாக்கிய தவறால் ஏற்பட்டு உள்ளது என உறுதியாக கூறினர்.
எனினும், அமெரிக்காவை சேர்ந்த ஊடக விமர்சகரான கேன்டேஸ் ஓவன்ஸ் கூறும்போது, பீபீ என்ன ஆனார்? அவருடைய அலுவலகம் ஏன் பொய்யான ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டு, நீக்கி வருகிறது. வெள்ளை மாளிகையில் ஏன் பெரிய அளவில் பதற்றம் காணப்படுகிறது? என அவருடைய எக்ஸ் வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
