புதுடெல்லி,
பெண்கள் அணிகளுக்கான பில்லி ஜீன் கோப்பை (பெட் கோப்பை) டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப் 1 போட்டி டெல்லியில் இன்று முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதும்.
இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். உலக தரவரிசையில் 28-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி இன்று நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை எதிர்கொள்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு ஒற்றையர் மற்றும் ஒரு இரட்டையர் ஆட்டம் இடம்பெறும்.
இந்திய அணியில் சஹஜா யமலாபள்ளி, வைஷ்ணவி அட்கர், ஜீல் தேசாய், அங்கிதா ரெய்னா, ருதுஜா போசலே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திறமை வாய்ந்த வீராங்கனையான ஸ்ரீவள்ளி பாமிதிபதி காயம் காரணமாக விலகி இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
