பீர் பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதிபராசக்திநகர் மேற்கு காட்டுப் பகுதியில் சுமார் 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் டி.எஸ்.பி. சுதீரும் அங்கு சென்று ஆய்வு செய்தார்.

இதில் கொலை செய்யப்பட்டவர் உடலில் பீர் பாட்டிலால் தாக்கியும், குத்தியும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த பகுதியில் மதுபாட்டில்கள் கிடந்ததால் மது போதையில் கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அந்த நபர் யார் என்று நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி மச்சாதுநகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளி ஆறுமுகசாமி (வயது 58) என்பது தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link