இந்த, புதுச்சேரி 2026 சட்டப்பேரவை தேர்தலில் தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்காளர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அம்மாநிலத்தில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இதன் மூலமாக 2026 தேர்தல் புதுச்சேரியின் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைக்கல்லை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். எப்போதும் இல்லாமல், வாக்குப்பதிவு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
அவற்றில் முக்கியமானது ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில், மாநில அந்தஸ்து கோரிக்கை, மின்சார தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற விவகாரங்கள் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை உச்சமடைய செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம், இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் முதன் முறையாக போட்டியிட்டது. இதன் விளைவாக, புதிய வாக்காளர் மற்றும் இளைஞர்களின் வருகை அதிகரித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், வாக்குப்பதிவு சதவீதத்தை வைத்து எதையும் கணித்துவிட முடியாது. எனவே, மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் வெளியாக இருப்பதால் அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். இதற்கு மத்தியில், புதுச்சேரியில் கள்ள ஓட்டு போட்டு இருப்பதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். முன்பெல்லாம் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்பில் வாக்காளர் புகைப்படம் இடம் பெறுவது இல்லை. இதன் காரணமாக ஆள் மாறாட்டம் செய்து வாக்குகளை பதிவு செய்வது தொடர்கதையாக இருந்து வந்தது.
இதை கண்டறிந்த தேர்தல் ஆணையம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கையாள தொடங்கியது. இப்போது வாக்காளர்களின் வண்ண புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் கள்ள ஓட்டு, ஆள் மாறாட்டம் போன்ற தவறுகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. இத்தனை பாதுகாப்பிற்கு மத்தியிலும் புதுச்சேரியில் நடந்த தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்து வாக்குப்பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள ஜவகர்லால் நேரு சமுதாய நலக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற ஒரு வாலிபர் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த தேர்தல் அதிகாரி பெயர் சீனிவாசன் என அறிவிக்க, பாஜக, காங்கிரஸ், பிற கட்சி பூத் ஏஜெண்டுகள் குறித்து கொண்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் ஏஜெண்ட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டு, வாக்காளர் பட்டியலில் சோதிப்பதற்குள் அந்த வாக்கை பதிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவர் வாக்கை பதிவு செய்துவிட்டு வெளிய வந்த போது காங்கிரஸ் ஏஜெண்டு தடுத்து நிறுத்தி அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். இது தொடர்பாக திருக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது, அவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும், புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் தொரவியை சேர்ந்த அரவிந்த் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவரிடம் ஒரு அரசியல் கட்சியினர் அழைத்து, சீனிவாசன் என்பவர் வாக்கு செலுத்த வரமாட்டார்.
“கொலம்பிபோன கூட்டணி, சோர்ந்துபோன கூட்டணி” புதுச்சேரியில்- விஜய்
எனவே, அரவிந்த் வந்து வாக்கு செலுத்துமாறும், அதற்கு பணம் தருவதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்தே, அரவிந்த் அங்கு வாக்கு பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திர தொகுதியாக கருத்தப்பட்ட மண்ணாடிப்பட்டு தொகுதி . இங்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில உள்துறை அமைச்சரான நமச்சிவாயம் போட்டியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
