சென்னை,
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) புதுவையில் ‘ரோடு ஷோ’ நடத்துகிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவருக்கு முதல்-மந்திரி ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பின்னர் கார் மூலம் அஜந்தா சிக்னல் சந்திப்புக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து திறந்த வாகனத்தில் ஏறி ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற உள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு டிரோன்கள் விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசாரத்தை முடித்து விட்டு மீண்டும் புதுச்சேரி விமான நிலையத்திற்கு திரும்பும் பிரதமர் மோடி, இன்று இரவே ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.
