புதுச்சேரி,
புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், தி.மு.க. 13 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்தநிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன்மார்க்கெட் அருகில் நடந்தது.
கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வரவேற்று பேசினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.
தொடர்ந்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு அவர் பேசுகையில், “2026-ல் காங்கிரஸ் ஆட்சியில் கட்டாய கல்வி திட்டத்தை நிறைவேற்றுவோம். 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி வழங்குவோம். மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அனைத்து குடும்பத்துக்கும் ரேஷன்கடைகளில் இலவசமாக வழங்கப்படும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 2029-ம் ஆண்டு ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இதேபோல புதுச்சேரி பா.ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதி வெளியிடும் நிகழ்ச்சி மறைமலையடிகள் சாலையில் உள்ள கிரீன் பேலஸ் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, பா.ஜனதா மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து பா.ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டனர்
பா.ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதியின் விவரம் வருமாறு:-
* புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுக்கு 2 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக பொங்கல்,விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலங்களில் வழங்கப்படும்.
* மகளிரின் மேம்பாட்டுக்காக ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தை தொடங்கி பெண்களுக்கு இலவச ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஆட்டோக்கள் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர் வழங்க ‘அன்பு தங்கை திட்டம்’ தொடங்கப்படும்.
* ‘குரூப் சி’ மற்றும் ‘டி’ அரசு பணிகளில் 60 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். அனைத்து யூனியன் பிரதேச பொது பல்கலைக்கழகங்களிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்..
* புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
* மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்துவோம்.
* புதுச்சேரி இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை உருவாக்குவோம்.
* புதுச்சேரி விவசாயிகளின் பொருளாதார எதிர்காலத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கிடைப்பது உறுதி செய்யப்படும். சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு ஒரு சோழிய வடகரை ரக கறவை மாடு அல்லது 2 ஆடுகள் வழங்கப்படும். குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர் சேதங்களுக்கு உட னடி முதற்கட்ட இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய ரூ.200 கோடி மதிப்பிலான தொகுப்பு நிவாரண நிதி உருவாக்கப்படும்.
* புதுச்சேரி முழுவதும் 30 மலிவு விலை அடல் உணவகங்கள் அமைக்கப்படும்.
* உள்ளூர் பிரச்சினை தீர்க்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ரூ.5 லட்சம் சிறப்பு நம்ம ஊரு பட்ஜெட் வழங்கப்படும்.
* இளம்தொழில் முனைவோருக்கு 3 சதவீதம் வட்டியில் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
* காரைக்கால் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து திருநள்ளாறு கோவிலுக்கு இலவச பஸ் சேவைகள் (மின்சார பஸ்கள்) தொடங்குவோம்.
* புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரெயில் நிலையங்களில் இரட்டை அகல ரெயில் பாதைகள் அமைத்து தரம் உயர்த்தப்படும். புதுவை ரெயில் நிலையத்துக்கு மகாகவி பாரதியார் பெயர் சூட்டப்படும். புதுச்சேரி-விழுப்புரம் பிரிவை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்போம். அதன்பின் சென்னை-புதுச்சேரி இடையே வந்தே மெட்ரோ ரெயில் இயக்குவோம்.
